சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் முகேஷ் குமார் என்பவர் பில்டர் காபி கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் இன்று காலை கடையைத் திறந்து காபி போடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கேஸ் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்தது. மேலும் தீ கடை முழுவதும் பரவி தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனை அடுத்து கடையின் உரிமையாளர் முகேஷ் ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது கடையில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் கடையில் இருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.