ஆத்தூரில் மக்களை தேடி திட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி நேற்று ஆத்தூருக்கு வந்தார். ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது காரில் சென்றார். அப்போது தலைவாசல் பகுதியை சேர்ந்த பூம்பூம் மாடு வளர்க்கும் 36 குடும்பத்தினர் கலெக்டர் காரை முற்றுகையிட்டு தலைவாசல் பகுதியில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருவதாகவும் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து கலெக்டர் பிருந்தா தேவி பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் 10 நாட்களில் வீட்டுமனை பட்டா குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் சமாதானம் அடைந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.