சேலம் மாவட்டத்தில் 25 மையங்களில் நடந்த முதலமைச்சர் திறனாய்வு தேர்வில், 6, 482 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினர். தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், ‘முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பிளஸ் 2 முதல் பட்டப் படிப்பு வரை, ஆண்டுக்கு ₹10 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 படிக்கும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ₹ஆயிரம் வீதம், 10 மாதங்களுக்கு ₹10 ஆயிரம் என இளங்கலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்.
இதற்கான தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. காலையில் முதல் தாளான கணிதமும், மதியம் 2 மணிக்கு 2ம் தாளான அறிவியல், சமூக அறிவியல் தேர்வும் நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 2, 710 மாணவர்கள், 4, 421 மாணவிகள் என மொத்தம் 7, 131 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 25 மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வு நடந்தது. இதில், மாணவர்கள் 2, 350 பேரும், மாணவிகள் 4, 132 பேரும் என மொத்தம் 6, 482 பேர் (91%) கலந்து கொண்டு தேர்வெழுதினர்.