ஆத்தூர் நகராட்சி கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கவிதா ஸ்ரீராம், ஆணையாளர் சையது முஸ்தபா கமால், பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் 5-வது வார்டு தி. மு. க. கவுன்சிலர் தங்கவேலு ஆவேசமாக சத்தம் போட்டவாறு அரங்கிற்குள் நுழைந்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த 2 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் எடுத்து ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் தன்னை தி. மு. க. பிரமுகர் ஒருவர் தாக்க முயன்று வருவதாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் ஆவேசமாக கூறினார். பின்னர் பெட்ரோல் பாட்டிலை எடுத்து திறக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த மற்ற கவுன்சிலர்கள் தடுத்து அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை வாங்கி கொண்டனர்.
பின்னர் தனது வார்டில் அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், வார்டுக்கு வர வேண்டிய பணிகள் அ. தி. மு. க. வினர் வார்டுகளுக்கு செல்வதாக கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நகராட்சி தலைவர் எழுந்து கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். கூட்டத்தில் 62 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.