சேலம் மாவட்டம் கருமந்துறை கல்வராயன் மலை தொடர் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
கருமந்துறை அருகே உள்ள பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மனைவி ராதிகா (வயது 28). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆத்தூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக தனது உறவினரான விஜி (27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காட்டெருமை திடீரென மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. மேலும் வண்டியில் இருந்து தடுமாறி விழுந்த ராதிகா மற்றும் விஜியை காட்டெருமை முட்டி தள்ளியது. அதே நேரத்தில் அந்த வழியாக பானுமதி என்ற பெண் ஒட்டி வந்த மொபட்டின் மீதும் காட்டெருமை முட்டியது. இதில் அவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
இதனிடையே காட்டெருமை முட்டியதில் படுகாயம் அடைந்த ராதிகா மற்றும் விஜி மற்றும் காயம் அடைந்த பானுமதி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.