திருவாடானையில் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலையிலிருந்து மாலை வரை காத்திருந்தும் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிகளில் ரேஷன் கடைகளில் கருவிழி ரேகை மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயல் ரேஷன் பொருட்கள் வெளி சந்தைக்கு போவதைத் தடுப்பதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் பெரும்பாலான வயதானவர்களுக்கு கருவிழி ரேகை ஸ்கேன் செய்ய இயலவில்லை அதனால் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல் நிலை உள்ளது. ஒருசிலருக்கு கண் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் கருவிழி ரேகை ஸ்கேன் ஆகவில்லை.
இப்படி வயதானவர்களுக்கும் கருவிழி ரேகை ஸ்கேன் ஆகாமல் காலையிலிருந்து மாலை வரை காத்திருக்க வேண்டிய அவலநிலை இருப்பதாகவும், பசிக்குப் பச்சைத் தண்ணீரை குடித்து பசியை போக்கிக் காத்திருந்தும் பலன் இல்லை என்றும், இதுவரை அரிசி வழங்கப்படாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.