ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் முனைக்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி பேச்சியம்மாள் (எ) சின்னப்பொண்ணு, அவர் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த அக். மாதம் 5 ம் தேதி இரவு வியாபாரம் முடிந்து வீடு திரும்பியபோது அவரை நோட்டமிட்ட மர்மநபர்கள் சின்ன பொண்ணுவை கொலை செய்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
இந்த நிலையில் மூதாட்டியின் இறப்பில் சம்பந்தப்பட்ட கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் கடந்த மாதம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக மண்டபம் கேம்ப் முனைக்காடு பகுதியை சேர்ந்த சின்னக்காஞ்சி மற்றும் அவரது உறவினர்களை மண்டபம் போலீசார் கடந்த இரண்டு நாட்களாக காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்து வந்தனர்.
அதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் சின்னக்காஞ்சி நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து மண்டபம் போலீசார் அவரது பிரேதத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்கு விசாரணைக்கு அவரை அழைத்ததால் மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.