ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தலைமை இடமாகவும், சட்டமன்றத் தொகுதி அந்தஸ்திலும் இருந்து வருகிறது. இதனால் இங்கு நீதிமன்றம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனை என உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
இந்த அலுவலகங்களுக்கு பிஎஸ்என்எல் இணையதளம் சேவை உள்ளிட்ட தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பி எஸ் என் எல் அலுவலகத்தில் இணையதள சேவை மற்றும் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் உட்பட 5க்கும் மேற்பட்டோர் இந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்தனர்.
ஆனால் தற்போது அலுவலர்கள் யாரும் இல்லாமல் பிஎஸ்என்எல் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. மேலும், அலுவலர்கள் யாரும் இல்லாததால் கட்டிடங்களும் பராமரிக்கப்படாமல் பாழடைந்து காணப்படுகிறது.
இதனால் இணையதள சேவை மற்றும் இதர சேவையில் தடை ஏற்பட்டால் அதை சரி செய்ய அலுவலகத்தை அணுக முடியாமல், அரசு அலுவலர்கள் மற்றும் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயன்படுத்தி வரும் பொது மக்களும் வாடிக்கையாளர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.