ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கச்சிமடத்தைச் சேர்ந்த செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை மன்னார் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 படகுகளையும், 17 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. பின்னர் மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வவுனியா சிறையில் அடைத்தது. இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர்கள் இதைக்கண்டித்து தங்கச்சிமடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மீனவர்களை விடுவிப்பதற்கான கோரிக்கையை முன்வைப்பதாக தெரிவித்திருந்தனர்.
அதன்படி பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து, சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளையும், 17 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது மீனவர்கள் குடும்பத்தினர் ஆட்சியரிடம் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.