தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய கடற்படையினா் இன்று துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட உள்ளதால், அன்று 5 மணி நேரம் அந்த பகுதியில் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மீன் வளம், மீனவா் நலத் துறையினா் தெரிவித்ததாவது ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த நடராஜபுரம், சேராங்கோட்டை, ராமகிருஷ்ணபுரம் மீனவா்கள் தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் அதிகாலையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், இந்தப் பகுதி கடலில் இந்திய கடற்படையினா் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் முற்பகல் 2 மணி வரை ஈடுபடுகின்றனா்.
இதனால், இந்தப் பகுதிக்கு அந்த நேரத்தில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது. இதுகுறித்து ஏற்கெனவே அந்தப் பகுதி மீனவ சங்கத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றனா்.