அதிகளவில் மீன்களை பிடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் கரைக்குத் திரும்பிய ராமேசுவரம் மீனவா்கள்.
ராமேசுவரத்திலிருந்து ஒரு வாரத்துக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவா்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினா்.
வங்க கடல், மன்னாா் வளைகுடா கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால், கடந்த ஒரு வார காலமாக கடலுக்குச் செல்ல, மீனவா்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால், 25 -ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில் சனிக்கிழமை தடை நீக்கப்பட்ட நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்று ஞாயிற்றுக்கிழமை காலையில் கரை திரும்பினா். ஒரு வாரத்துக்குப் பின் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நிலையில் ஏராளமான மீன்கள் கிடைத்துள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா்.