ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்கள் இயக்கி நடத்தப்பட்ட சோதனை ஓட்டம், செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனைகள் வெற்றிகரமாக ஏற்கனவே முடிவடைந்து உள்ளது. அதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 13, 14-ம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ. எம். சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார்.
அவரது ஆய்வு அறிக்கையில், பாலத்தில் 50 கி. மீ. வேகத்தில் ரயிலை இயக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், பாலம் துரு பிடிப்பது மற்றும் அலைன்மென்ட் சரியில்லை போன்ற சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவற்றை சரிசெய்த பின்னரே ரயிலை முறைப்படி இயக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து குறைபாடுகளை சரிசெய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனிடையே, ஏ. எம். சவுத்ரி சுட்டிக்காட்டிய குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளனவா என்று ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று பாம்பன் புதிய ரயில் பாலத்தில்
தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின்பு பாலம் பாதுகாப்பாக இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறோம். எங்களது அறிக்கையை ரயில்வே அமைச்சகத்துக்கும் அளிப்போம். அதன் அடிப்படையில் ரயில் பாலம் திறப்பு விழா தேதி முடிவு செய்யப்படு என தெரிவித்தார்