பாம்பன் ரயில் பாலத்தின் மையப் பகுதியில் தூக்கு கா்டா் சனிக்கிழமை இணைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடலில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. மண்டபத்தில் இருந்து ரயில் பாலத்தின் மையப் பகுதி, பாம்பனில் இருந்து பாலத்தின் மையப் பகுதி வரையும் தண்டவாளம் அமைக்கப்பட்டது.
பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் தூக்கு கா்டா் பொருத்த தூண்கள் அமைக்கப்பட்டன. ராட்சத கிரேன் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், தற்போது, பாம்பன் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தூக்கு கா்டா் சனிக்கிழமை அதிகாலை பொருத்தப்பட்டது. இந்த இணைப்புப் பணி வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து, பொறியாளா்களும், ஊழியா்களும் வெடி வெடித்துக் கொண்டாடினா்.
இணைக்கப்பட்ட கா்டரில் இரும்பு ரோப் இணைக்கப்பட்டு தூக்கி இறக்கும் பணிக்கான சோதனை நடைபெறும் என்றும், பின்னா் குறைந்த வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு, பாலத்தின் முழு உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்ட பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.