ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் புரம் தாலுகா உப்பூர் அருகே மோர்பண்ணை மீனவ கிராமத்தில் சிங்காரம் மனைவி காளீஸ்வரி என்பவர் குடும்பத்திற்கும் மோர்பண்ணை கிராம நிர்வாக செயலாளர் குடும்பத்திற்கும் இடைய கடந்த சில வாரத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகராறில் காளீஸ்வரி, சிங்காரம், இவர்களது மகன்கள் மற்றும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பார்ப்பதற்காக உறவினர்கள் சென்றுள்ளனர் இதனால் பார்க்கச் சென்ற 13 குடும்பம் உட்பட காளீஸ்வரி குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்துள்ளனர். பொதுவான கடைகளுக்கு செல்லக்கூடாது, பொது இடங்களுக்கு செல்லக்கூடாது, இவர்களது மீன்களை வாங்க கூடாது, நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்ள கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி ஊரிலும் நடந்து வருவதாகவும் இதனால் பெரும் அவதி அடைந்த 13 குடும்பத்தார்களும் இன்று திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் சென்று உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக மக்கள் தெரிவித்தனர்.