ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சீதக்காதி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகின்றனர். அதேபோல், ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பல்வேறு தொடர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மாவட்ட அளவிலான லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது மாவட்ட விளையாட்டு அலுவலராக இருக்கக்கூடிய தினேஷ் அவர்கள் கிரிக்கெட் போட்டி விளையாட விடாமல் தடுத்து வருவதாகவும், சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் தமக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்பதாக புகார் கூறப்படுகிறது.
அதேபோல், தமிழகத்தில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் மட்டுமே கிரிக்கெட் பயிற்சி பள்ளி இருந்தது. இதனை தற்போதைய மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் இங்கு கிரிக்கெட் வீரர்களில்லை என்று கூறிவிட்டு ராமநாதபுரத்திலிருந்து கிரிக்கெட் அகாடமியை ரத்து செய்துவிட்டார். இதனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை கிரிக்கெட் வீரர்கள் உரிய பயிற்சி பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.