ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் மீன் இறக்கும் பாலத்தில் குடிமகன்கள் ரவுசு காட்டுவதால் காலி மதுபாட்டில்கள் குவிந்துள்ளன.
பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ. 27 கோடியில் படகுகள் நிறுத்தவும், மீன்களை இறக்கி பதப்படுத்தவும் அனைத்து வசதியுடன் கூடிய பாலம் அமைத்து 2021ல் மீனவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இப்பாலத்தில் துாண்டில் வளைவு பாலம் இல்லாததால் இங்கு நிறுத்தும் படகுகள் ராட்சத அலையால் சேதமடைகிறது. இதனால் இங்கு பெரும்பாலும் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதில்லை.
இருப்பினும் சில நாட்களில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி பிய்ந்த வலையை சரி செய்து சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்வார்கள். ஆனால் இரவில் இங்கு உலா வரும் குடிமகன்கள் மது குடித்து காலி பாட்டிகளை வீசி ரகளை செய்கின்றனர். இதனால் பாலத்தில் பல இடங்களில் மது பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடக்கிறது.
மேலும் ஆங்காங்கே கிடக்கும் கழிவு உணவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. பல கோடி செலவில் அமைத்த பாலம் மது பாராக மாறியதால் மீனவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இரவில் இப்பாலத்தில் போலீசார் ரோந்து செல்ல எஸ். பி. , சந்தீஷ் உத்தரவிட வேண்டும்.