பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் வாகனங்கள்; பயணிகள் தடுமாற்றம்!

540பார்த்தது
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இங்கு பரமக்குடி பணிமனையிலிருந்து 80க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும் நிலையில் பல இடங்களில் இருந்தும் தினமும் பல நூறு பஸ்கள் வந்து செல்கின்றன.

இதன்படி ராமேஸ்வரம் செல்லும் பிரதான வழித்தடமாக பரமக்குடி விளங்குகிறது. மேலும் போகலுார், நயினார்கோவில், பரமக்குடி ஒன்றியங்கள் உட்பட முதுகுளத்துார், சாயல்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் செல்லும் பஸ்களும் ஏராளமாக இங்கு வருகின்றன.

இதனால் தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொழிலாளர்கள், வியாபாரம், விசேஷங்களுக்கு வருவோர், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வருகின்றனர்.

இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் உள்பகுதியில் உள்ள கடைகளுக்கு சரக்குகளை ஏற்றி இறக்க மினி வாகனங்கள், லாரி மற்றும் குடிநீர் வாகனங்கள் என நாள் முழுவதும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படுகிறது.

ஏற்கனவே ஆக்கிரமிப்புகளால் மக்கள் நிற்க இடமின்றி தவிக்கும் நிலையில் இது போன்ற வாகனங்களால் பயணிகள், பஸ் டிரைவர்கள் தடுமாறும் நிலை உள்ளது. இதனால் பல நேரங்களில் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

எனவே பஸ் ஸ்டாண்ட் நிலை கருதி ஆக்கிரமிப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி