கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மனு.!

51பார்த்தது
கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மனு.!
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூா் மக்கள் சிறப்பு வழியில் சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுப்பதைக் கண்டித்து, கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா். பக்தா்களுக்கு சிறப்பு தரிசனக் கட்டணமாக ரூ. 100, ரூ. 200 வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் செல்லும் பாதையில் உள்ளூா் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

ஆனால், அந்த வழியைப் பயன்படுத்தி கோயில் ஊழியா்கள் வெளிமாநில பக்தா்களை பணம் பெற்றுக்கொண்டு அனுமதிப்பதுடன், உள்ளூா் மக்களை அனுமதிக்க மறுத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைக் கண்டித்து, வருகிற 14-ஆம் தேதி இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் சி. ஆா். செந்தில்வேல் தலைமையில் சென்று அந்த அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

தொடர்புடைய செய்தி