ராமநாதபுரம்: விவசாயம் செழிக்க வேண்டி கறி விருந்து
விவசாயம் செழிக்க வேண்டி 101 கிடாய்கள் பலியிடப்பட்டு 1500 கிலோ ஆட்டுக்கறியுடன் கறி விருந்து நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள எம். தானியங்கூட்டம் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ நொண்டி கருப்பணசாமி, ஸ்ரீ அய்யனார் கோயில் 424 ஆம் ஆண்டு சந்திமரைச்ச பொங்கல் விழாவை முன்னிட்டு 101 கிடாய்கள் பலியிடப்பட்டு 1500 கிலோ ஆட்டுக்கறியுடன் கறி விருந்து நடைபெற்றது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் ஸ்ரீ நொண்டி கருப்பணசாமி கோவிலுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டி பலியிடுவது வழக்கம். கடந்த 420 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கறி விருந்தில் பங்கேற்று வந்தனர். விவசாயம் செழிக்க வேண்டியும், பருவ மழை பெய்ய வேண்டியும் அப்பகுதி மக்கள் ஸ்ரீநொண்டி கருப்பண சாமியை வணங்கி வந்துள்ளனர். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் ஸ்ரீநொண்டி கருப்பணசாமியை வணங்கினால் திருமண தடை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.. ஆகையால் இக்கோயிலுக்கு நேர்த்திக்கடனாக 101 கிடாய்கள் பலியிடப்பட்டு 1500 கிலோ கறியுடன் கறி விருந்து நடைபெற்றது. இதில் எம். தானியங் கூட்டம் , மறவர் கரிசல்குளம் , மங்கலம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் கிடாய் நேர்த்திக்கடனாக கொடுத்த நபர்களுக்கு கிராமத்தின் சார்பாக ஒரு பக்கெட்டில் சாப்பாடு மற்றும் கறியுடன் பரிசளிக்கப்பட்டு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது