ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள கீழத்தூவல் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அனைவரும் பிரதான தொழிலாக விவசாயம், மற்றும் கால்நடை மேய்ச்சலை அடிப்படை தொழிலாக கொண்டுள்ளனர். இங்குள்ள கண்மாய் கடந்த 60 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் நாணல்கள் , கருவேல மரங்கள் வளர்ந்து புதர் போல் காட்சியளிப்பதால் மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் விவசாயிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகளிடம் புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. மழைக்காலங்களில் வரத்து கால்வாயில் வரும் மழைநீரானது கண்மாயில் சேமிக்க முடியாமல் மிளகாய், பருத்தி, நெல் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் புகுவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கீழத்தூவல் கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.