ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வருகை தந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த. மோகன் உடனிருந்தார். அமைச்சர் சாமிநாதன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அன்னாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து நினைவு மண்டபத்தின் முன்புறம் பொதுமக்கள் நினைவிடத்திற்கு வந்து செல்ல நிரந்தரமாக மேற்கூரை அமைக்க திட்டமிட்டு அதற்கான இடத்தை பார்வையிட்டார். அமைச்சர் கூறுகையில்,
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்ற தேவர் திருமகனார் என போற்றும் வகையில் எல்லோரிடமும் அன்பை பெற்ற தலைவராக இருந்து வந்தவர், அவருக்கு முத்தமிழறிஞர் கலைஞரால் நினைவிடம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசு விழா அக் 30 அன்று நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி 3 நாட்கள் இங்கு விழா நடைபெறுவதாலும் நாள்தோறும் பல்லாயிரம் மக்கள் வந்து செல்வதால் நினைவிடம் முன்பாக பொதுப்பணித்துறையின் மூலம் தற்காலிக கொட்டைகள் அமைத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்கிணங்க விழாவிற்கு வரும் பொதுமக்கள் சிரமமின்றி சென்றுவர ஏதுவாக ரூ. 1. 50 கோடி மதிப்பீட்டில் நிரந்தரமாக மேற்கூரை அமைக்கவும், முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர மேற்கூரை அமைக்கவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளும் வகையில் இன்று பணி மேற்கொள்ளவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது என்றார். நவாஸ் கனி எம்பி, காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல்ஏ, முருகேசன் எம் எல்ஏ, கூடுதல் இயக்குனர் தமிழ்செல்வராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வாசுதேவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன் அவர்கள் மற்றும் தேவரின் வாரிசுதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.