கடலாடியில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சக்கரங்கள் கழன்று ஓடிய நிலையில் முதல் பரிசை தட்டிச் சென்ற மாட்டுவண்டி:
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருள்மிகு ஸ்ரீ வனப்பேச்சியம்மன் ஆலய வருடாபிஷேக விழாவை முன்னிட்டு சின்ன மாடு பெரிய மாடு என இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
சின்ன மாடு பந்தயத்திற்கு 6 மைல் தூரமும், பெரிய மாடு பந்தயத்திற்கு 8 மைல் தூரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டதில் மொத்தம் 17 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சித்திரங்குடியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மாட்டுவண்டியின் சக்கரம் ஒன்று திடீரென கழன்று ஓடியது.
இதனையடுத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் ஒற்றை சக்கரத்தில் வெற்றி இலக்கை நோக்கி மாட்டு வண்டி சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் மாட்டு வண்டியின் மற்றொரு சக்கரத்தின் நட்டுகள் கழன்று கொண்டு இருப்பதை அறிந்த சாரதி ( மாடு ஓட்டுபவர் ) மாட்டை ஓட்டிக்கொண்டே தனது மற்றொரு கையால் கழன்று கொண்டிருந்த நட்டுக்களை சரி செய்தவாறே வீரத்துடனும், விவேகத்துடனும் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி இலக்கை தொட்டு முதல் பரிசை தட்டிச் சென்றார்.
மேலும் ஒற்றை சக்கரத்தில் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த சென்ற மாட்டுவண்டி பார்வையாளர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது.
இந்தப் பந்தயத்தில் ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளுக்கும் , சாரதிகளுக்கும் ரொக்க பரிசு மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த மாட்டு வண்டி போட்டியை சாயல்குடி கமுதி முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.