முதுகுளத்துார் சாயல்குடி ரோடு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அருகே வீடுகளுக்கு முன்பு தேங்கிய கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. முதுகுளத்துார் பேரூராட்சி காவல்காரன் தெரு, மறவர் தெரு, கடலாடி ரோடு உட்பட பல்வேறு தெருக்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
மறவர் தெரு, காவல்காரன் தெரு ரோட்டோரத்தில் கால்வாய் வசதி உள்ளது. இதில் கழிவுநீர் செல்ல வழியின்றி முதுகுளத்துார்-சாயல்குடி ரோட்டோரத்தில் கால்வாயில் தேங்கியுள்ளது. கடலாடி ரோட்டில் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்குகிறது. மழை பெய்தால் வீடுகளுக்கு உள்ளே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மோட்டர் வைத்து வெளியேற்றும் நிலை உருவாகியுள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
தற்போது முதுகுளத்துார்- சாயல்குடி ரோடு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அருகே ரோட்டோரத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வழியே செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். எனவே இவ்வழியே கழிவுநீர் முறையாக செல்ல பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.