ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் நிறைகுளத்து அய்யனார் கோவில் ஆனி மாத பொங்கல் விழா மற்றும் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இதில் மதுரை, ராமநாதபுரம் , புதுக்கோட்டை திருச்சி, சிவகங்கை மாவட்ட பகுதிகளில் இருந்து 12 காளைகள் கலந்து கொண்டன. காளையை அடக்க மாடுபிடி வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மைதானத்தில் வடம் பூட்டப்பட்டு ஒவ்வொரு காளைகளாக களம் இறக்கப்பட்டது. 9 வீரர்கள் கொண்ட குழுவினர் களம் இறங்கினர். களத்தில் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைகளுக்கும் 20 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டது.
சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. சீறிப் பாய்ந்த பல முரட்டுக் காளைகள் வீரர்களுக்கு சவால் விட்டு பிடிபடவில்லை. இதில் பிடிபடாத மாடுகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பணம், அண்டா, ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
மேலும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கீழச்சாக்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
இவ்விழாவை காண சுற்றுவட்டார கிராமத்தினர் ஏராளமானோர் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.