கீழக்கரை, ஏர்வாடியில் உள்ள சில ஓட்டல்களில் கெட்டுப்போன மீன் உணவு விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் சுற்றுலா இடங்களுக்கு உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சில ஓட்டல்களில் லாபநோக்கத்தில் நாள்பட்ட மீன்களை பிரிட்ஜில் வைத்து அவற்றை குழம்பிலும் பொரித்தும் வைத்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் அசைவ உணவு அதிகரித்துள்ளது. இவ்விஷயத்தில் உணவு பாதுகாப்புதுறை ஆய்வு பெயரளவில் நடக்கிறது. இதனை சாதகமாக்கிக் கொண்டு ஒரு சில ஓட்டல்களில் கெட்டுப்போன மீன்கள் மற்றும் இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். அதனை சாப்பிட்ட பின்பு பொதுமக்களுக்கு வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, அலர்ஜி உள்ளிட்ட உடல் உபாதைகளை சந்திக்க வேண்டி உள்ளது.
வெளியூர் பயணிகள் அதிகளவில் வந்துசெல்லும் கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டலில் உணவு கலப்பட தடுப்பு அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்ய முன்வர வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், கீழக்கரை ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்து கெட்டுபோன மீன்களை பயன்படுத்துவது தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றார்.