ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் செல்லியம்மன் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக பள்ளி வளாகம் அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள சின்ன அறையில் சமையல் செய்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.
ஆனால் குழந்தைகள் படிக்க, விளையாட, ஓய்வெடுக்க இடம் இல்லை. அதனால் இம்மையத்தில் உள்ள 20 குழந்தைகள் வெயிலில் அமர்ந்து படிக்கவும், உணவு உண்ணும் நிலையும் உள்ளது. திறந்த வெளியில் அமர்வதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. குழந்தைகளை வெயிலில் அமர வைப்பதால் சில பெற்றோர், தங்கள் குழந்தை களை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுக்கின்றனர்.
இந்த அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். அதுவரை பாதுகாப்பான வாடகை கட்டிடத்தில் தங்க வைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரிடம் கேட்டபோது, கட்டிட வசதி கேட்டு தலைமை அலுவலகத்துக்கு கடிதம் கொடுத்துள்ளோம். அரசு நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் கட்டி தர விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.