முதுகுளத்துார் அருகே இறைச்சிகுளம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பேராயிரம் மூர்த்தி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
இறைச்சிகுளம் கிராமத்தில் பேராயிரம்மூர்த்தி அய்யனார் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் குதிரை எடுப்பு விழா கொண்டாடப்பட்டது. 2017ல் இரு தரப்பாக செயல்பட்டு வந்ததால் பேராயிரம் மூர்த்தி அய்யனார் கோயில் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முதுகுளத்துார் தாசில்தார் சடையாண்டி தலைமையில் இருதரப்பினருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி கோயில் திறக்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பேராயிரம் மூர்த்தி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது.
மானாமதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது. கிராம மக்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். தயார் செய்யப்பட்ட குதிரைகள், தவழும் பிள்ளைகள் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்டு இறைச்சிகுளம் கிராமத்தில் ஊர்வலமாக துாக்கி வந்தனர்.
பேராயிரம் மூர்த்தி அய்யனார் கோயில் முன் கடந்தாண்டு விளைந்த நெல் உள்ளிட்ட தானியங்களை வழங்கி குதிரைகள் கண்திறப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.