புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், நமணசமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 5 பேரை தனிப்படையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து தங்கம் மற்றும் வௌளிக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். 11 திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையில், அறந்தாங்கி எல்என்புரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் தேவா (58), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கீழத்தெரு மீனாட்சிசுந்தரம் மகன் ஹரிஹரன் (44), ஆவுடையார்கோவில் முண்டகவயல் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் வெங்கடேஷ் (26), அறந்தாங்கி பூவைமாநகர் அலஞ்சரக்காடு கணபதி மகன் சொக்கலிங்கம் (54), கீரமங்கலம் வேப்பங்குடி மேற்கு செட்டித் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் தங்கபாண்டியன் (46) ஆகிய 5 பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 100 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டி, 5. 750 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ. 1, 500, 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் அழைத்துப் பாராட்டினார்.