பணியின்போது, உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தையின் நடத்துநர் பணியைப் பெற்று, புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அறந்தாங்கி பட்டதாரிப் பெண்.
புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், அரசுப் பேருந்து நடத்துநர். இவர், கடந்த 2008-ஆம் ஆண்டு பணியின்போது உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மூத்த மகள் கவுரீஸ்வரி (28), பிகாம் பட்டதாரி. இளைய மகள் மனநலக் குறைபாடுடையவர். கவுரீஸ்வரிக்கு அறந்தாங்கி அருகே குளுத்திராக்கோட்டையைச் சேர்ந்த பத்மநாபன் என்பவருடன் திருமணம் முடிந்து 4 வயதில் மகள் உள்ளார். பத்மநாபன் தினக்கூலிப் பணியாளர். இந்நிலையில், தந்தையின் நடத்துநர் பணியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் தொடர்ச்சியாக அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், ஆட்சியர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்துவந்தார். இதன்பயனாக, புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் பணி ஆணை அண்மையில் புதுக்கோட்டையில் அமைச்சர் சா. சி. சிவசங்கர் பங்கேற்ற விழாவில் அவருக்கு வழங்கப்பட்டது.
இரண்டு நாள்கள் புதுக்கோட்டையிலிருந்து காவேரி நகர் மற்றும் கண்ணணூர் பகுதிகளுக்குச் செல்லும் நகரப் பேருந்தில் நடத்துநராகச் சென்றிருக்கிறார் கவுரீஸ்வரி.