நீரில் மூழ்கடித்து மூதாட்டியை கொலை செய்த நபர் கைது!

574பார்த்தது
நீரில் மூழ்கடித்து மூதாட்டியை கொலை செய்த நபர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம், அரசர்குளம் பேட்டை பகுதியில் புதன்கிழமை மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்துக் கொன்று, நகைகளைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.
நாகுடி காவல் சரகத்துக்குள்பட்ட அரசர்குளம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சாத்தாயி (75). இவர் புதன்கிழமை மாலை அப்பகுதியிலுள்ள கோட்டாகுளத்துக்கு குளிக்கச் சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதைத் தொடர்ந்து இரவில் அந்தக் குளத்தில் தேடியபோது, தென்கரையில் அவர் சடலமாககிடந்தது தெரியவந்தது. காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை காணவில்லை. உடலில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

புலன்விசாரணையைத் தொடங்கிய தனிப்படையினர், அரசர்குளத்தைச் சேர்ந்த இப்ராஹிம் மகன் முகாஸ்ரின் (25) என்பவரைக் கைது செய்தனர். நகைக்காக மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்ட அவரிடமிருந்து, 3 பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி