அறந்தாங்கியில் பழமையான பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா 30 நாட்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவை ஒட்டி கடந்த 12ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டுகள் எடுத்து வந்த அம்மனுக்கு செலுத்தி வழிபாடு நடத்தினர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று மும்மதத்தினரும் வழிபடும் வர்த்தக சங்கம் மண்டாகபடியும் நடந்தது. விழா நாட்களில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்து வந்தது. திருவிழாவில் 9 ஆம் நாளான நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. மேளதாளம் முழங்க உற்சவர் வீரமாகாளியம்மன் தேரில் எழுந்தருளியதும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பாலையவனம் ஜமீன் செந்தில் குமரன் இந்து சமய அறநிலைத் ஆட்சி துறை உதவி ஆணையர் அனிதா மற்றும் மாகாணத்தார்கள், மண்டகடித்தார்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். முதல் நாள் தேரோட்டம் சௌராஷ்டிரா காளியம்மன் கோயில் எதிரே நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து இரண்டாம் நாள் தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. விழாவை ஒட்டி அறந்தாங்கி டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையில் 100க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.