அரியாங்குப்பம் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் பிரம்மோற்சவ தீமிதி திருவிழா கடந்த மாதம் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இவ்வாலயத்தில் சுவாமி வீதியுலா திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக இவ்வாலயத்தில் காலை ஸ்ரீ வேத விநாயகர் கோவிலில் இருந்து புனித நீர் திரட்டி சிறப்பு அபிஷேகங்கள் செய்து அரவான் படுகளம் கொண்டு செல்லுதல், படுகளம் அமைத்தல், தீக்குளிக்கி அக்னி கொண்டு செல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று மாலை சங்கராபரணி நதிக்கரையில் நீர் திரட்டி பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு மாட வீதிகளில் வீதி உலா வந்து தீக்குழி இறங்கி தீமிதி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் நோன்பு மேற்கொண்டு காப்பு கட்டி தீக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அமுல் என்கிற கமல ஜோதி விழா குழுவினர்கள் உபயதாரர்கள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.