புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் 2. 0 துவக்கி வைத்தல், மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்குதல், அடிப்படை கட்டமைப்பு பணிகளை துவக்கி வைத்தல், அர்ப்பணித்தல் மற்றும் பிற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு திட்டங்களை துவக்கி வைத்தனர். இதில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், தலைமை செயலாளர், துறை செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 16% சிறப்பு கூறு நிதி ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆதிதிராவிடர் மக்களுக்கு பாரத பிரதமர் கல்வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி புதுச்சேரி அரசு காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்துடன் இணைந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். மேலும் தற்போது நல்ல அரிசி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அரிசியுடன் நல்ல கோதுமையும் வழங்கப்படும் என கூறினார்.