புதுச்சேரியில் இந்த ஆண்டு நேற்று மாசிமகம் தீர்த்தவாரி நடைபெற்றது. புதுச்சேரிக்கு வருகை புரிந்த திண்டிவனம் ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் மாசி மகத்தில் கலந்துகொண்டு அருள்பாலித்தார். தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் வந்தடைந்த ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் இன்று காலை ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சீர்வரிசை தட்டு வழங்கி, பூ நூல் மாற்றுதல் நிகழ்வும், பூ பந்து விளையாடலும் நடைபெற்றது. தொடர்ந்து பெண்களும், ஆண்களும் கும்மியடித்து நடனமாடினர்.
தொடர்ந்து மாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும், குழந்தை பாக்கியங்கள் கிடைக்கும், குடும்பத்தில் சந்தோஷங்கள் நிலைக்கும், கடன் தொல்லைகள் நீங்கும் என்பதால் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.