புதுச்சேரி கூட்டுறவு நிறுவனமான பாப்ஸ்கோ, பாசிக், நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி பலர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்த நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி, கடலில் இறங்கியும், தலைகீழாக நின்றும், வயிற்றில் ஈரத் துணியை அணிந்து கொண்டும், தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இருந்த போதும் அரசு இவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்வராமல் அலட்சியம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆளும் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்து பாப்ஸ்கோ, பாசிக் ஊழியர்கள் ஏஐடியுசி தலைமையில் பேரணியாக வந்து சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அரசு இனியும் காலம் கடத்தாமல் நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பாப்ஸ்கோ, பாசிக் நிறுவனங்கள் சம்பந்தமாக ஊழியர்களை பாதிக்காத வகையில் நல்ல முடிவினை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
அப்பொழுது போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் தடுப்பு கட்டைகளை தகர்த்து எறிந்து முன்னேற முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.