புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி அரசு பி. ஆர். டி. சி பேருந்து சென்று கொண்டிருந்தது. பயணிகளை ஏற்றுக் கொண்டு வில்லியனூர் வழியாக கரையான்புத்தூர் பகுதிக்கு செல்லும் பொழுது ஒப்பந்த ஊழியரான ஓட்டுநர் பஜனிக்கு (43) வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து ஏம்பலம் புதுகுப்பம், செம்பிபாளையம் இடையே சாலையோரத்தில் 5 அடி வயல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பேருந்து ஓட்டுனர் உட்பட 20 நபர்கள் படுகாயமடைந்தனர்.
அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக படுகாயமடைந்தவர்களை கரிக்கலாம்பாக்கம் சுகாதார நிலையத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சிலர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டு விபத்துக்குள்ளான விவகாரம் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.