புதுச்சேரி அடுத்த திருக்கனூர் மன்னாடிபட்டு, செல்லிக்கட்டு, சோரப்பட்டு, வாதானூர், கலித்தரம்பட்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் அறிவிக்கப்படாமல் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.
இதனால் அந்த பகுதி மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளதுடன் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதேபோல் தொடர் மின்வெட்டு காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளும் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இது சம்பந்தமாக திருக்கனூர் மின்துறை அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் அந்த புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பட்டால் அப்பகுதி மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் திருக்கனூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு திருக்கனூர் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கைப்பற்றினர். மேலும் காலை 10: 30 மணி வரை அலுவலகத்திற்கு ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் உள்ளே சென்ற பொதுமக்கள் நாற்காலியில் அமர்ந்து பணி செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மின்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசி, மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.