மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் மங்கலம் தொகுதிக்குட்பட்ட பெருங்களுர், தனத்துமேடு உள்ளிட்ட நான்கு கிராம பகுதிகளில் சுமார் 600 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1800 மக்கள் வசித்து வருகின்றனர். கோயில் தீர்த்தவாரி தரிசனம் மற்றும் இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சுடுகாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் செல்லும் பிரதான பழமையான சாலையை துண்டித்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் அன்றாட தேவைக்கும் இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்வதற்கும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேம்பாலம் வழியாகச் சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பிணத்துடன் மறியல் போராட்டமும் நடத்தினர். ஆனால் இதுவரை இதற்கு தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த காந்தி காமராஜினி என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய சென்ற மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவரின் பிரேதத்தை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து மீண்டும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.