புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ரொட்டி பால் ஊழியர்கள் அரசு பள்ளியில் பால் காய்ச்சி மாணவர்களுக்கு வழங்கும் வேலை செய்து வருகின்றனர். ரூ. 10 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த நிலையில், கடந்த வருடம் இவர்களுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கடந்த வருடம் சட்டசபையில் அறிவித்தனர். ஆனால் இதுவரை உயர்த்தி தரப்படவில்லை. மேலும் கடந்த 20 வருடங்களாக ஊழியர்கள் தொடர் கோரிக்கை வைத்தும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முதலமைச்சர் அலுவலகத்தில் சம்பள உயர்வு அணையை 917 ஊழியர்களுக்கு வழங்கினார்கள். மேலும் ஊழியர்கள் மகிழ்ச்சியில் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயத்திற்கும் கை குலுக்கி இனிப்புகள் வழங்கியும், மலர்கள் தூவி நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.