புதுச்சேரி அருகே கலிங்கமலையில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 1-ம் தேதி பகல் பத்து திருவிழாவாக தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல்பத்து திருவிழாவின் 10-ம் நாள், பரமபதநாதன் சேவையில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் எழுந்தருளினர். தொடர்ந்து திருமங்கையாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி, அதிகாலை 5: 30 மணிக்கு துலாம் லக்னத்தில் சொர்க்கவாசல் நடை திறந்து பாமா, ருக்மணி சமேதராக ஸ்ரீ ரங்கநாத பெருமாள் சுவாமி பரம நாதனாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் சொர்க்க வாசலை திறந்தபோது அதிகாலை முதலே வருகை புரிந்து இருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சொர்க்கவாசலுக்குள் நுழைந்து கோபாலா, கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க ஸ்ரீரங்கநாத பெருமாள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர். இதில் திமுக எம். பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.