தியாகிகள் நினைவிடத்தில் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு

69பார்த்தது
ஆசியக்கண்டத்தில் முதல் முறையாக 8 மணிநேர வேலை கேட்டு போராடிய புதுச்சேரியை சேர்ந்த பஞ்சாலை தொழிலாளர்கள் மீது கடந்த 1936-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் நாள் பிரெஞ்சு ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் 12 பஞ்சாலை தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த போராட்டம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பணி 8 மணி நேரம் என நிர்ணையிக்கப்பட்டது. இதை 8 மணி நேர வேலை என்பது பல்வேறு நாடுகளில் சட்டமானது. 8 மணி நேர வேலை வேண்டி போராடிய பஞ்சாலை தொழிலாளர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 30-ந் தேதி அன்று தியாகிகள் தினமாக அனைத்து கட்சி தொழிற்சங்கத்தினர் கடைப்பிடித்து வருகின்றனர். அதன் படி புதுவையில் ஜூலை 30 தியாகிகள் நினைவு தினம் இன்று காலை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை- கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் புதுச்சேரியில் உள்ள இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் தொழிலாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்களும் ஊர்வலமாக வந்து மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி