மகாத்மா காந்தி பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ம் தெதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை தூய்மையே சேவை என்ற நோக்கத்தில் அரசு சார்பில் தூய்மை பணி இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் புதுச்சேரியில் உள்ள நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் சார்பில் மாநிலம் முழுவதும் தூய்மை பணிகள் மற்றும் தூய்மை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறை உள்ளாட்சித்துறை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம் ஜவகர் நகரில் உள்ள உழவர்கரை நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் அனைவரையும் வரைவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கி புதுச்சேரி மாநிலத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணிகாக்குமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், உள்ளாட்சித்துறை இயக்குநர் சக்திவேல், அரசு பொது மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுமார் 200 தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.