தென்மேற்கு பருவமழை காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் அடுத்த 6 தினங்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் காலை முதல் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை முதல் குளிர்ந்த காற்று வீசி வந்தது. இந்நிலையில் இரவில் திடீரென கன மழை பெய்ய தொடங்கியது. புதுச்சேரி முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, லாஸ்பேட்டை, உருளையன்பேட்டை, மூலக்குளம் உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும், வில்லியனூர், திருக்கனூர், பாகூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட கிராம பகுதிகள் என புதுச்சேரி மாநிலம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.