ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக புதுவை ஏனாம் பிராந்தியத்தையொட்டியுள்ள பத்ராச்சலம், தவிலேஸ்வரம் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது. அணைகளில் இருந்த பாதுகாப்பு அளவை மீறி விட்டதால் நீர் கோதாவரி ஆற்று வழியே கடலுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கடல் மற்றும் கோதாவரி ஆற்றையொட்டி உள்ள ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ள நீர் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளான பிரான்சிபா, பாலயோகி நகர், பழைய ராஜுவ் நகர், குருசம்பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் மற்றும் கடலோர கிராமங்களில் வெள்ள நீர் உள்ளே புகுந்து வருகின்றன. தொடர்ந்து கோதாவரி ஆற்றில் வெள்ளபெருக்கு அதிகரித்து இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏனாம் பிராந்திய மண்டல நிர்வாகி முனுசாமி தலைமையில் புதுச்சேரி அரசுக்கான டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ், கொல்லபள்ளி அசோக் எம். எல். ஏ ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறையினரின் கூட்டம் நடந்தது. இதில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் மோட்டார் மூலம் வெள்ள நீரை வெளியேற்றுவது, புதுவையில் இருந்து மருத்துவ குழுக்களை வர வழைத்து மழைக்கால நோயில் இருந்து மக்களை காக்க துரித நடவடிக்கை எடுப்பது, போதிய மணல் மூட்டைகளை வைப்பது, படகு மீட்பு குழுக்களை தயாராக வைப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன