பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல்-புதுச்சேரி என இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஏற்ப பிரான்ஸில் எது நடந்தாலும் அது புதுச்சேரியில் எதிரொலிக்கும். அந்த வகையில் பிரான்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை வரவேற்கும் விதமாக புதுச்சேரியில் சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்தாண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டியில், இந்தியாவில் இருந்து அதிகளவில் வீரர்கள் இந்த ஆண்டு பங்கேற்றுள்ளனர். இதனை கொண்டாடும் வகையில், புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் புதுச்சேரி பிரெஞ்சு தூதரகம் இணைந்து ஒலிம்பிக் போட்டி வரவேற்பு விழாவை நடத்தின.
பாரீசில் ஒலிம்பிக் போட்டி துவக்கத்தில் நடந்த நடனம், வாணவேடிக்கை போல புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் உற்சாகமாக கொண்டாடினர். இதில் ஏராளமான பிரான்ஸ் வாழ் மக்களும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் கண்டு களித்தனர்.