ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரியில் ஏனாம் பிராந்தியத்தையொட்டியுள்ள பத்ராச்சலம், தவிலேஸ்வரம் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது. அணைகளில் இருந்து பாதுகாப்பு அளவை மீறி விட்டதால் நீர் கோதாவரி ஆற்று வழியே கடலுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கடல் மற்றும் கோதாவரி ஆற்றையொட்டி உள்ள ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இங்குள்ள பாலயோகி பாலத்தை தாண்டி வெள்ள நீர் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளான பிரான்சிபா, பாலயோகி நகர், பழைய ராஜுவ் நகர், குருசம் பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் மற்றும் கடலோர கிராமங்களில் வெள்ள நீர் உள்ளே புகுந்து வருகின்றன. தொடர்ந்து கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு அதிகரித்த வண்ணம் இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
மேலும் ஆற்றில் வெள்ளம் கரைகளை தாண்டி விட்டதால் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த அறிவுறுத்தியுள்ள மீன்வளத்துறை ஆறு மற்றும் கடலில் மீன்பிடிக்க தடை விதித்துள்ளனர்.