புதுச்சேரியில் வழக்கமாக உற்சாகத்துடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் விநாயகருக்கு தங்க கவசம் அறிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் முழுமுதற் கடவுளான விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
வருடத்தின் முதல் நாள் என்பதால் ஏராளமானோர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதே போல் பல்வேறு கோவில்களிலும் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.