புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மிஷன் வீதியில் உள்ள நூற்றாண்டு பழமையான தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புதுச்சேரி மற்றும் கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் பேராயர் குழந்தை ஏசு சொரூபத்தை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த குடிலில் வைதத்தார். இதையடுத்து 12. 01 மணி ஆனவுடன் பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்துவர்கள் தங்களது அருகில் இருந்தவர்களுக்கு, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கைகளை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதே போல் புதுச்சேரியில் உள்ள அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.