இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாகவும், தியாகத்தை உணர்த்தும் வகையிலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை தியாக பெருநாளாகவும் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
புதுச்சேரியில் இன்று (ஜூன் 7) பக்ரீத் பண்டிகைக்கொட்டி தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் சிறுவர், சிறுமிகள், பெண்கள், ஆண்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்கள்.
இதேபோல் புதுச்சேரியில் உள்ள குத்பா பள்ளி, மீராப்பள்ளி, நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளி மற்றும் காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை 6 மணி முதல் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதனிடையே பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.