2024-ஆம் ஆண்டு முடிந்து 2025-ஆம் ஆண்டு பிறந்துள்ளதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. புத்தாண்டு பிறப்பு புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நட்சத்திர ஹோட்டலகளில் நடைபெற்ற மதுவுடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகளில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரை சாலையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் லட்சகணக்கானோர் குவிந்தனர்.
ஆனால் இந்த முறை மன்மோகன் சிங் மறைவால் புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரையில் பாட்டுகச்சேரி மற்றும் இசை நிபழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் புத்தாண்டை கொண்டாட வந்த அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இருந்தாலும் அங்கு கூடியிருந்தவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு புதிய வருடம் பிறந்ததும், புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஹேப்பி நியூ இயர் என கோஷங்களை எழுப்பியும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
ஆனால் பல்வேறு இடங்களில் தனியார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டி. ஜே. நடன நிகழ்ச்சியில் மக்கள் கலந்துகொண்டு இசைக்கேற்ப நடனமாடினர். பின்னர் புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர்.